ஓசூரில் துணிகர சம்பவம் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஓசூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 63 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்த சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-06-17 18:11 GMT
ஓசூர்:
ஓசூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 63 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்த சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஐ.டி.நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சித்தனப்பள்ளி சக்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்து பணி செய்யுமாறு சீனிவாசனை அவர் பணிபுரிந்து வரும் நிறுவனத்தினர் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் சீனிவாசன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.
இதனால் அவர் தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். அவர் வீடு பூட்டி கிடந்தது. அவரது வீடு திறந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.25 லட்சம்
அதன்பேரில் சீனிவாசன் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 63 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
இது குறித்து சீனிவாசன் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று மாலை அங்கு விரைந்து சென்றனர். அதே போல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
பெரும் பரபரப்பு
மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். கிருஷ்ணகிரியிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
அது சிறிது தூரம் அங்குமிங்கும் ஓடியது. இந்த கொள்ளை தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூரில ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.25 லட்சம் நகைகள், பணம் கொள்ளை யடிக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்