கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை பெண்கள் உள்பட 542 பேர் இறந்தனர்.
இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 65 வயது முதியவர், 70 வயது மூதாட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, நிலக்கோட்டையை சேர்ந்த 68 வயது முதியவர், தனியார் மருத்துவமனையில் நத்தம் பகுதியை சேர்ந்த 55 வயது ஆணும் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 547 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே நேற்று 13 பெண்கள் உள்பட மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கடந்த ஒரு மாதத்துக்கு பின்னர் கொரோனா பாதிப்பு 100-க்கு கீழே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்து 785 ஆனது. மேலும் 243 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.