கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

கடலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கூடங்களுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-17 17:23 GMT
கடலூர், 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் மாணவ- மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பு, கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டபோதிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இருப்பினும் சில பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், வாட்ஸ்-அப் மூலமாக தொடங்கப்பட்டுள்ளன.

நடப்பு கல்வியாண்டு

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான பணிகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்ததன்பேரில் அப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்குதல், சேர்க்கை செய்தல், மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், பிற பள்ளிகளுக்கு செல்வதற்கு மாற்று சான்றிதழ் வழங்குதல், பாடப்புத்தகம் வழங்குவதற்கான ஆயத்த பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. நோய் தொற்று முழுமையாக குறைந்து பள்ளிகள் திறப்பதற்கு இடையே ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்துவதற்கு வசதியாக மாணவ- மாணவிகளுக்கு தேவையான விலையில்லா பாடப்புத்தகங்களை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மும்முரம்

சென்னையில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் சார்பில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பப்பட்டன.
இதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க அந்தந்த பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 1,716 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 474 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து பெறப்பட்டு அவை கடலூர் மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டது.

பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி

இதையடுத்து கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் நேற்று கடலூர் மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து லாரிகள் மூலம் விருத்தாசலம், சிதம்பரம், கடலூர், வடலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இந்த பாடப்புத்தகங்களை பெறும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதனை ஒரு வகுப்பறையில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது குறித்து அரசிடம் இருந்து இன்னும் முறையான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அரசு அறிவித்தவுடன் பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகளை வரவழைத்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வழங்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்