உடன்குடியில் 1,845 மூட்டை வெள்ளை சர்க்கரை பறிமுதல்

உடன்குடியில் கலப்பட கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 1,845 மூட்டை வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-17 17:16 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் கலப்பட கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் உடன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பு ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்கள் ஆய்வு செய்த 5 ஆலைகளிலும் கலப்படத்துக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 1,340 மூட்டைகளில் இருந்த 67 டன் வெள்ளை சர்க்கரையை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அதற்கு உரிய ஆணைகளை உரிமையாளர்களிடம் வழங்கினர். அதன் மதிப்பு சுமார் ரூ.23 லட்சத்து 25 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

மேலும், இவர்களுக்கு வெள்ளை சர்க்கரை வினியோகம் செய்த உடன்குடியில் உள்ள ஒரு மொத்த விற்பனை நிறுவனத்திலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அந்த நிறுவனம் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் இன்றி செயல்பட்டதும், அங்கு உரிய ரசீதுகள் இல்லாமல் கலப்படத்துக்கு வினியோகம் செய்வதற்காக சுகாதாரமற்ற முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 505 மூட்டையில் இருந்த 25 டன் வெள்ளை சர்க்கரையும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

சம்பந்தப்பட்ட ஆலைகள் மற்றும் சர்க்கரை விற்பனை நிறுவனம் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதேபோல் கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு உற்பத்தியாளர்கள் வெள்ளை சக்கரையை கலப்படத்துக்கு மீண்டும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இரட்டிப்பு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

3-வது முறையாக கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆலைகளில் வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டால், அந்த நிறுவனங்களது உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கருப்புக்கட்டி மற்றும் பனங்கற்கண்டு தாயாரிப்பாளர்களுக்கு வெள்ளை சர்க்கரை விற்பனை செய்யும் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்