சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் எந்திரம் மூலம் குறுவை சாகுபடி பணி - வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் எந்திரம் மூலம் குறுவை சாகுபடி பணியை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
சீர்காழி,
சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் விவசாயி ராமகிருஷ்ணன் என்பவரின் வயலில் விதை விதைக்கும் எந்திரம் மூலம் விதைப்பு செய்வதை நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் விவசாயிகளிடம் கூறுகையில், எந்திரம் மூலம் நேரடி விதைப்பு செய்வதால் விதை அளவு குறைகிறது. சாகுபடி செலவும் குறையும் மற்றும் இடைவெளி அதிகம் இருப்பதால் நன்கு தூர்கட்டி அதிக மகசூல் கிடைக்கும். எனவே நேரடி விதைப்பு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் ட்ரம்சீடர் மூலம் சேற்று உழவில் விதைப்பு செய்யலாம் அல்லது புழுதி உழவு செய்து டிராக்டர் கொண்டு நேரடி விதைப்பு செய்யும் எந்திரம் மூலம் விதைப்பு செய்யலாம்.
நெல் சாகுபடியில் மகசூல் அதிகம் பெற தரமான சான்று விதைகளை பயன்படுத்துதல் சூடோமோனாஸ் மற்றும் உயிர் உரங்கள் நேர்த்தி செய்து விதைப்பு செய்வதினால் பல நன்மைகள் ஏற்படும். பின்னர் விதை நேர்த்தி செய்து விதைப்பு செய்திட வேண்டும். மண்ணின் வளம் அதிகரிக்க மக்கிய தொழு உரம் அல்லது சிட்டி கம்போஸ்ட் இரண்டு டன் ஒரு ஏக்கருக்கு வயலில் அடி உரமாக இட வேண்டும். தற்பொழுது கொரோனா காலமாக உள்ளதால் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் முக கவசம் அணிந்த பாதுகாப்புடன் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை வழங்க வேண்டும் என்றார்.
ஆய்வின்போது சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண்மை அலுவலர் சின்னண்ணன், துணை வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ராமன். முன்னோடி விவசாயிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.