தனித்தனி விபத்து 2 பேர் பலி

தனித்தனி சாலை விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

Update: 2021-06-17 13:03 GMT
விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை தாலுகா வ.பெரியகுப்பத்தை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 54), தொழிலாளி. இவர் தனது மகள் தமிழரசியுடன் (25) ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னை மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் செல்லும்போது அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த டாரஸ் லாரி, பச்சமுத்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பச்சமுத்து பலியானார். படுகாயமடைந்த தமிழரசியை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் டாரஸ் லாரி டிரைவரான விழுப்புரம் அருகே கொளத்தூரை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

கோட்டக்குப்பத்தை அடுத்த சின்னமுதலியார்சாவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் சதீஷ் (வயது 38). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னை- புதுச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். சின்னமுதலியார்சாவடி கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது பின்னால் வந்த கார், அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் சதீஷ், மணிகண்டன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே அவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சதீஷ் இறந்தார். மணிகண்டன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்