மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
கொளுத்தும் வெயிலில் பயிர்கள் தண்ணீரின்றி காயும் நிலை ஏற்பட்டுள்ளதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வசதியாக மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாஞ்சிக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை, வேங்கராயன்குடிகாடு, கொல்லாங்கரை, மருங்குளம், மின்னாத்தூர், குருங்குளம், ஏழுப்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தென்னை, உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
சில கிராமங்களில் நெல் சாகுபடி பணியும் நடைபெற்று வருகிறது. விவசாய தேவைக்காக தமிழக அரசு தினசரி 12 மணிநேரம் மின்சாரம் வழங்கிவருகிறது. இந்த மின்சாரத்தை விட்டு, விட்டு ‘ஷிப்டு’ முறையில் வினியோகம் செய்கிறார்கள்.
தற்போது கடுமையான வெயில் கொளுத்தி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே இறங்கி விட்டதாகவும், தேவையான அளவு மின்சாரம் இன்றி விவசாய தேவைக்கான மின் மோட்டார்களை இயக்க முடியவில்ைல என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகிறார்கள். தண்ணீரின்றி காயும் தென்னை, நிலக்கடலை, உளுந்து, நெல் உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றுவதற்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.