சென்னை சேத்துப்பட்டில் நடந்த பழைய குற்றவாளி கொலை வழக்கில் 6 பேர் கைது
சென்னை சேத்துப்பட்டில் நடந்த பழைய குற்றவாளி கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓட, ஓட விரட்டி கொலை
சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கருப்பா என்ற வடிவழகன் (வயது 27). இவர், சூளைமேடு நமச்சுவாயபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்தார். இவர், பழைய குற்றவாளி ஆவார். திருட்டு வழக்குகளில்
சம்பந்தப்பட்டவர். இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் வந்து வெளியே அழைத்துச் சென்றது.சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை சுரங்கப்பாதை அருகே உள்ள முத்தப்பன் தெருவில் இவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. திடீரென்று அவர்கள் 7 பேரும் சேர்ந்து வடிவழகனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். உயிர் தப்பிக்க வடிவழகன் ஓடினார். அவரை விரட்டி சென்று அந்த கும்பல் வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
6 பேர் கைது
இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் ராஜ்மோகன், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.கொலை செய்யப்பட்ட வடிவழகன் உடல் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சேத்துப்பட்டு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் 7 பேரை தேடி வந்தனர். இந்த வழக்கில் கொலையாளிகள் மணி என்ற காராமணி (23), நிர்மல், ஸ்டீபன், கஜினி (45), அப்பு என்ற அருள்முருகன் (20), சாய்நாத் ஆகிய 6 பேரை சேத்துப்பட்டு போலீசார் கைது செய்தனர். சந்துரு என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.வடிவழகனை கொலை செய்யும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் துப்பு துலக்கி கொலையாளிகளை பிடித்துள்ளனர்.
சிறையில் மோதல்
வடிவழகன் மீது கொலை வழக்கு உள்ளது. அதற்காக அவர் சிறைக்கு சென்றார். சிறையில் வைத்து காராமணியோடு வடிவழகனுக்கு மோதல் ஏற்பட்டது. காராமணியை வெளியே வந்தவுடன் நான் போட்டு தள்ளுவேன் என்று வடிவழகன் சபதம் போட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த காராமணிக்கு இந்த விஷயம் தெரிந்தது. எனவே தன்னை தீர்த்துக்கட்டுவதற்கு முன்பு வடிவழகனை தீர்த்துக்கட்ட காராமணி திட்டம் போட்டு செயல்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.