விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.40 வசூலித்தால் உரிய நடவடிக்கை
விவசாயிகள் கொண்டு வரும் நெல் உடனடியாக கொள்முதல் செய்யப்படும் எனவும், விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு ரூ.40 வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தஞ்சாவூர்:
விவசாயிகள் கொண்டு வரும் நெல் உடனடியாக கொள்முதல் செய்யப்படும் எனவும், விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு ரூ.40 வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.
அரசு தலைமை கொறடா கோவி.செழியன், உணவு மற்றும் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் நஜிமுதீன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் ராஜாராமன், உணவு வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை ஆணையர் ஆனந்தகுமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குனர் சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.
பேட்டி
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல் கொள்முதலில் நிலவும் சிரமங்கள் குறித்து டெல்டா மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கூறினர். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பதற்கு மழை, வெயிலில் 5, 6 நாட்கள் காத்து இருக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். உடனடியாக அவர்களுக்குப் பணம் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மழை காலங்களில் நெல் அதிகமாக சேதமடைகிறது. அதற்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ளதைப்போன்று சைலோ முறையில் நெல்லை கொள்முதல் செய்து, மழை காலங்களில் நெல் சேதம் அடையாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நவீன அரிசி ஆலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர்.
குற்றச்சாட்டு
1,000 குடும்ப அட்டைகளுக்கு அதிகமாக இருக்கிற நியாய விலைக்கடைகளை சேர்ந்த குடும்ப அட்டைகளை பிரித்து பகுதி நேர நியாய விலைக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை எல்லாம் தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தரப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து மூட்டைக்கு ரூ.40 வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. அதை களைவதற்கு அங்கு பணியாற்றுகின்ற காவலர், சுமை தூக்கும் தொழிலாளி, பட்டியல் எழுத்தர் உள்ளிட்ட 4 பேருக்கு ஊதியம் உயர்த்தி தர வேண்டும் என்றும், அவ்வாறு உயர்த்தப்பட்டால் இந்த பிரச்சினை வராது என்றும் கூறினர். அதையும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர்களது ஊதியத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிய நடவடிக்கை
ஆனால், மூட்டைக்கு ரூ.40 வாங்குவதை இந்த அரசு ஏற்றுக்கொள்ளாது. ஏற்கனவே கடந்த 15 நாட்களுக்கு முன்பு காணொலிக்காட்சி மூலம் நடந்த கூட்டத்தில், கடந்த ஆட்சியைப்போல் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 வாங்குவதை கைவிட வேண்டும் என்றும், அவ்வாறு யாராவது பணம் பெற்றால், அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறையின் சார்பில் அலுவலர்களிடம் அறிவுறுத்தினேன்.
நெல் கொள்முதல் நடைபெறும் சரியான நேரத்தில் இந்த கூட்டத்தை நடத்தி உள்ளோம். விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை உடனடியாக அரவை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். தற்போது, கொள்முதல் நிலையங்களில் தேங்கி உள்ள நெல்லை உடனடியாக அரவை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். எந்த விவசாயியும் உற்பத்தி செய்கிற நெல்லை வாங்குவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். அந்த விவசாயிக்கு பணம் உடனடியாக சென்றடைவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு நெல் கொண்டு வந்து வியாபாரிகள் விற்பதாகவும் புகார் கூறினர். இனிமேல் எந்த தவறும் நடக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். டெல்டா மாவட்டங்களில் சைலோ, நவீன அரிசி ஆலைகள் அமைத்து விவசாயிகளின் நலன் காக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், சாக்கோட்டை அன்பழகன், அண்ணாதுரை, அசோக்குமார், பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, ராஜ்குமார், பன்னீர்செல்வம், நிவேதா முருகன், கூடுதல் கலெக்டர்(வருவாய்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.