கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள ஏற்பாடு குழந்தைகள் பிரிவில் 300 படுக்கைகளுடன் தனி வார்டு
கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள ஏற்பாடு குழந்தைகள் பிரிவில் 300 படுக்கைகளுடன் தனி வார்டு
கோவை
நாடு முழுவதும் கொரோனா பரவல் தற்போது குறைந்து வருகிறது. இதையடுத்து 3-வது அலை விரைவில் தொடங்கலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
இதையடுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு தேவையான படுக்கைகள், மருந்துகள், ஆக்சிஜன், மருத்துவ உபகரணங் களை கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:-
கொரோனா தொற்றின் 3-வது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே கொரோனா தொற்றுக்காக குழந்தைகள் நலப்பிரிவில் 300 படுக்கைகள் கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் தீவிர சிகிச்சைப்பிரிவு, ஆக்சிஜன், செயற்கை சுவாசம் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். மேலும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் இம்யூனோ குளோபலின் மருந்து 300 குப்பிகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
தவிர குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் குறித்து குழந்தைகள் நலப் பிரிவு டாக்டர்களிடம் கேட்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.