பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக புகார்: சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணி இடைநீக்கம்
ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகிேயார் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சமயபுரம்,
ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக சிறுகனூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு ஆகிேயார் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மதுபாட்டில் விற்றதாக புகார்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது ரூ.200 அபராதம் விதித்தும், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அதன்படி திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவா்களை இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் எண்ணிக்கையை முறையாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமலும், போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை வெளியே கொண்டுவந்து தனியார் மூலம் விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பணி இடைநீக்கம்
இதைத்தொடர்ந்து போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன் சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அங்கு பணியாற்றி வரும் போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்தநிலையில், அங்கு பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீஸ் ஏட்டு ராஜா ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை விற்றதாக இன்ஸ்பெக்டர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த ஏட்டு மீதும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.