கிணற்றில் தவறி விழுந்த 2 மாணவர்கள் பலி
தளவாப்பாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பெற்றோர் கதறி அழுதனர்.
நொய்யல்
பள்ளி மாணவன்
கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் அருகே உள்ள என்.புதூர் ஆர்.கே. பட்டறை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராணி. இருவரும் கல் உடைக்கும் தொழிலாளர்கள். இவர்களது மகன் சுஜித் (வயது 10). இவன் என்.புதூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சக்திவேலும், ராணியும் வேலைக்கு செல்வதற்காக சுஜித்தை, சக்திவேலின் உறவுக்காரரான அதே பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளியான கோவிந்தன் என்பவரது மனைவி சித்ரா வீட்டில் விட்டு சென்றுள்ளனர். அப்போது சித்ராவின் வீட்டில் சக்திவேலின் அத்தை சரோஜாவும் இருந்துள்ளார்.
போலீசில் புகார்
சித்ராவின் மகன் தங்கதுரை (10). இவன் அரவக்குறிச்சி கோவிலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் சுஜித்தும், தங்கதுரையும் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். சக்திவேலின் அத்தை சரோஜா 2 மாணவர்களையும் கவனித்து கொண்டிருந்தார். அவர் சிறிது நேரத்தில் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மாலை 3.30 மணி அளவில் சரோஜா, சக்திவேலுக்கு போன் செய்து விளையாடி கொண்டிருந்த சுஜித்தையும், தங்கதுரையும் வெகுநேரமாக காணவில்லை என கூறியுள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த சக்திவேல்-ராணி மற்றும் சித்ரா ஆகியோர் சுஜித், தங்க துரையை அப்பகுதியில் உள்ள உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கிணற்றில் மூழ்கினர்
இந்நிலையில் நேற்று காலை என்.புதூர் 4 ரோடு பகுதியில் 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தங்கதுரை மற்றும் சுஜித் மூழ்கி இறந்து கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் வேலாயுதம் பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பிணமாக மீட்பு
பின்னர் கிணற்றில் மூழ்கி இறந்த தங்கதுரை மற்றும் சுஜித்தின் உடல்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். மாணவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது. பின்னர் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.