சிதம்பரம் அருகே விவசாயியை அடித்துக்கொன்ற 2 பேர் கைது

சிதம்பரம் அருகே விவசாயியை அடித்துக்கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-16 18:19 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள மருதூர் பூ.கொளக்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 60). விவசாயி. மனைவியை பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் ஜெயச்சந்திரன் அவரது வீட்டில் தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த மருதூர் போலீசார் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் புவனகிரி இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, மருதூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இடபிரச்சினை

அதில், ஜெயச்சந்திரனின் வீட்டு அருகே வசிக்கும் ராமகிருஷ்ணன் மனைவி சகிகலா(35) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சசிகலா, அவரது மகனான 18 வயது வாலிபரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில், சசிகலா தனக்கு சொந்தமான அந்த பகுதியில் உள்ள நிலத்தை ஜெயச்சந்திரனிடம் விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த இடத்தை சரியான முறையில் அவர் அளவீடு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சசிகலா, ஜெயச்சந்திரன் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

தீர்வு காண்பதற்கு சென்றனர்

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள மீன்மார்க்கெட்டில் வேலை செய்து வந்த சசிகலாவின் 18 வயது மகன், தன்னுடன் வேலைபார்க்கும் நண்பரான ராமநாதபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த  மணிகண்டன்(23) என்பவருடன் பூ.கொளக்குடிக்கு வந்திருந்தார்.

இதற்கிடையே ஜெயச்சந்திரன், சசிகலா இடையே மீண்டும் இடபிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசி தீர்வு காண்பதற்காக சசிகலாவை ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அதன்பேரில் சசிகலா, தனது மகன் மற்றும் மகனின் நண்பரான மணிகண்டன் என்பவருடன் அவரது வீட்டுக்கு சென்றார்.

இரும்பு கம்பியால் தாக்கினர்

அங்கு பேசி கொண்டிருந்த போது, சசிகலாவின் நடத்தை குறித்து ஜெயச்சந்திரன் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் ஜெயச்சந்திரனின் தலையில் தாக்கினார். பின்னர் மணிகண்டனும் சேர்ந்து தாக்கினார். 

இருவரும் சேர்ந்து சரமாரியாக அவரது தலை, முகத்தில் தாக்கினர். இதில் ஜெயச்சந்திரன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து சசிகலாவின் மகன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மணிகண்டனை கடலூர் சிறையிலும், சசிகலாவின் மகனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

மேலும் செய்திகள்