ஏலத்திற்கு பதிலாக வாழைத்தார் எடைக்கு விற்பனை
கூட்டம் கூடுவதை தவிர்க்க ஏலத்திற்கு பதிலாக வாழைத்தார் எடைக்கு விற்பனை செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறும். ஏலத்திற்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வாழைத்தார் கொண்டு வரப்படும்.
தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வாழைத்தார் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவதில்லை. இதற்கிடையில் கொரோனா காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க தற்காலிகமாக ஏலம் ரத்து செய்யப்பட்டு, வாழைத்தார் எடைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து வாழைத்தார் வியாபாரிகள் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் வாழைத்தார் விற்பனை குறைந்து விட்டது. இதற்கிடையில் கொரோனா காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. வழக்கமாக ஏலம் விடப்பட்டு வாழைத்தார் விற்பனை செய்யப்படும். தற்போது எடைக்கு செய்யப்படுகிறது.
ஒரு கிலோ பூவந்தார் ரூ.10 முதல் ரூ.16 வரையும், கற்பூரவள்ளி ரூ.10 முதல் ரூ.18 வரையும், நேந்திரம் ரூ.27 முதல் ரூ.32 வரையும், கதளி ரூ.24 முதல் ரூ.29 வரையும், மோரீஸ் ரூ.8 முதல் ரூ.13 வரையும், செவ்வாழை ரூ.26 முதல் ரூ.32 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.