நாகை அருகே ஸ்கூட்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்; ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி சாவு மெக்கானிக் படுகாயம்

நாகை அருகே ஸ்கூட்டரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி பரிதாபமாக இறந்தார். மெக்கானிக் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-06-16 16:46 GMT
சிக்கல்:-

நாகை அருகே ஸ்கூட்டரும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி பரிதாபமாக இறந்தார். மெக்கானிக் படுகாயம் அடைந்தார்.

ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தக்குடி ஊராட்சி பிச்சமங்களம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிநாதன்(வயது38). இவர், ஜனநாயக வாலிபர் சங்க கீழ்வேளூர் ஒன்றிய பொருளாளராக இருந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் தனது வீட்டில் இருந்து தேவூர் கடைவீதிக்கு மருந்து வாங்குவதற்காக கச்சனம்-கீழ்வேளூர் மெயின் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
தேவூர் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது எதிரே தேவூரில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை நடத்தி வரும் கூரத்தாங்குடி ஊராட்சி அண்டக்குடி மேட்டுத்தெருவை சேர்ந்த பாண்டியன்(38) என்பவர் ஸ்கூட்டரில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

சிகிச்சை பலனின்றி சாவு

இந்த விபத்தில் ஜோதிநாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதேபோல பாண்டியனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதிநாதன் பரிதாபமாக இறந்தார். பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்