102 குழந்தைகளுக்கு நிவாரண நிதி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 102 பேர் அரசின் நிவாரண நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 102 பேர் அரசின் நிவாரண நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பாதிப்பு
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோர்களுக்கு 18 வயதுக்கு கீழ் குழந்தைகள் இருந்தால் அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரண தொகை வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ராமநாத புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் கூறிய தாவது:- கொரோனா தொற்றால் பெற்றோர் உயிரிழந்தால் ரூ.5 லட்சமும், ஒருவர் மட்டும் இறந்திருந்தால் ரூ.3 லட்சமும் நிவாரண மாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கள ஆய்வு
இதற்காக மேற்கண்ட விதிகளின் கீழ் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் பெயர், முகவரி அடிப்படையில் நேரில் அவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு 18 வயதுக்கு கீழ் குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். இதன் அடிப்படையில் தற்போதைய நிலவரப்படி இதுவரை 102 பேர் அதுபோன்று உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நேரடியாக கள ஆய்வு செய்து கொரோனா தொற்றால் இறந்துள்ளவர்களின் வீடுகளில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் திட்டம் குறித்து விளக்கி கூறி விண்ணப்பங்களை பெற்று வருகிறோம்.
இந்த திட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமல்லாது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று இறந்தவர்களின் குழந்தைகளும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்க கலெக்டர் தலைமையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர், உதவி இயக்குனர், சமூக நலத்துறை அலுவலர், குழந்தைகள் நல அலுவலர் உள்பட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் இவர்கள் என்பதை உறுதி செய்து நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வார்கள்.
விழிப்புணர்வு
அதுபோன்றவர்கள் இருந்தால் கொரோனா தொற்றால் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, சம்பந்தப் பட்ட குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, பெற்றோர் அல்லது காப்பாளர் மற்றும் குழந்தைகளின் வங்கி கணக்கு புத்தகம், குழந்தைகளின் புகைப் ்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.