உடுமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நடைமுறைகளை அதிகாரிகள் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
உடுமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நடைமுறைகளை அதிகாரிகள் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தளி
உடுமலை பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நடைமுறைகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
தடுப்பூசி
கொரோனா பரவலை தடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படுகின்ற தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் வாரியாக பிரித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்படுகிறது. பின்பு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒரு பிரிவாகவும், 45 மேற்பட்டோருக்கு மற்றொரு பிரிவாகவும் போடப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்று கூடுவதை தவிர்க்கவும் நோய் தொற்று பரவாமல் இருக்கவும் முன்பதிவு நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
சுகாதாரத்துறையினரின் இந்த முடிவு வரவேற்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் உடுமலைக்கு உட்பட்ட அனைத்து பகுதியிலும் ஒரே மாதிரியான நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. உடுமலை நகரப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் எண் மற்றும் பெயரை பதிவு செய்தால் போதும். தடுப்பூசி போடுவதற்கு வரும்போது ஆதார்அட்டை நகல், டோக்கன் மற்றும் புகைப்படம் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஊரடங்கால் புகைப்படக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால் புகைப்படம் எடுப்பதற்கு பொதுமக்கள் படாதபாடு படுகின்றனர். பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே ரூ.100 செலவு செய்து புகைப்படம் எடுத்துச்சென்றாலும் ஊசி போடும்போது அவர்கள் புகைப்படம் பெறுவதில்லை. இது பொதுமக்களை வீணாக அலைக்கழிப்பதுடன் வருமான இழப்பை ஏற்படுத்தும் செயலாகும்.
குளறுபடிகள்
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செல்போன் எண், பெயர் கூடவே ஆதார் அட்டை நகலை கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். அவர்கள் அழைக்கும் போது சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் தடுப்பூசி போடுவதற்கு செல்லும் போது முதலில் நமது விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அப்போது நமது செல்போன் எண்ணுக்கு தடுப்பூசி போடப்பட்டதற்கு உண்டான ஒரு குறுஞ்செய்தி வந்து விடுகிறது.
அதன் பின்பே தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட படிப்பறிவற்ற பொதுமக்களுக்கு இது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஏனெனில் வயதானவர்களின் ஆதார் எண்ணை முன்பே கொடுத்து பதிவு செய்தால் அதில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. படிப்பறிவற்ற நபர்களுக்கு என்ன குறுஞ்செய்தி வருகிறது அது ஆங்கிலத்தில் உள்ளதா? தமிழில் உள்ளதா? என்ற விவரம் தெரியாது. அதை பயன்படுத்தி வேண்டிய நபர்களுக்கு முறைகேடான வழியில் ஊசி போடுவதற்கான சூழல் அதிகமாக உள்ளது.
தடுக்கப்படுமா?
இதற்கிடையில் டாக்டர்கள், செவிலியர்கள் கூறியதாக ஒரு சில வசதிபடைத்த நபர்கள் பொதுமக்கள் கால்கடுக்க நின்றிருந்தாலும் இடையில் வந்து தனக்கும், வேண்டியவர்களுக்கும் தடுப்பூசி போட்டு அழைத்துச் செல்கின்றனர். இதனால் முகாம்களில் அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்படுவதுடன் பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.எவ்வளவு மருந்து வருகிறது? அது எத்தனை நபர்களுக்கு போடப்படுகிறது? என்ற தகவல் முறைப்படியாக தெரியாததே குளறுபடிகளுக்கு காரணமாகும். இதனால் முன்பதிவு செய்துவிட்டு வரிசையில் காத்து கொண்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவான பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. எனவே கொரோனா தடுப்பூசி முன்பதிவுக்கு செல்போன் எண் மற்றும் பெயர் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும்.
பாரபட்சம் இல்லாமல்
தடுப்பூசி போடுவதற்கு வரும்போது ஆதார் அட்டை நகலை கொடுப்பதற்கு அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் முன்பு அன்றைய தினத்தின் தடுப்பூசி இருப்பு மற்றும் செலுத்தப்படவுள்ள பொதுமக்களின் பெயர்களுடன் கூடிய பட்டியலை தமிழில் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குளறுபடிகளை தவிர்த்து அனைவரும் பயன் அடைவதற்கு ஏதுவாக இருக்கும்.
பொதுமக்களும் தடுப்பூசிக்காக போராட வேண்டிய அவசியம் ஏற்படாது. சுகாதாரத்துறையில் ஒரு சிலர் சுயநலத்தோடு செய்யும் தவறுகளால் உயிரை பணையம் வைத்து போராடும் அனைவருக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் நிலவுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மட்டும் போதாது. தடுப்பூசி போடுவதிலும் பாரபட்சம் இல்லாமல் நேர்மையான வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.