ஓய்வுபெற்ற பெண் அதிகாரி வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் மோசடி- கலெக்டர் அலுவலகத்தில் புகார்
ஓய்வு பெற்ற பெண் அதிகாரி வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை கண்டுபிடிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம்:
ஓய்வு பெற்ற பெண் அதிகாரி வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை கண்டுபிடிக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற அதிகாரி
மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 73). உதவி தொடக்கக்கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, அங்கிருந்த அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 10-ந்தேதி காலை தொலைபேசியில் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் நான் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து ஊழியர் பேசுவதாக கூறினார். அப்போது புதிதாக வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஏ.டி.எம்.கார்டு வந்து உள்ளது. அதனை உடனடியாக வங்கிக்கு வந்து பெற்றுக் கொள்ளவும் என்று கூறினார். மேலும் எனது வங்கி கணக்குகளின் விவரங்கள், ரகசிய எண்ணை கேட்டார்.
ரூ.10 லட்சம்
அது உண்மை என்று நம்பி அவர் கேட்ட எனது வங்கி கணக்கின் விவரங்கள் மற்றும் ரகசிய எண் ஆகியவற்றை கூறினேன். சிறிது நேரத்திற்கு பிறகு எனது செல்போனுக்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ஆன்லைன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்திவந்தது.
இதைத்தொடர்ந்து வங்கிக்கு சென்று விசாரித்தேன். அப்போது எனது வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. ஆன்லைன் மூலம் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்து 42 ஆயிரத்து 300 மோசடி செய்த மர்ம நபரை கண்டுபிடித்து எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.