பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமான யு-டியூப் கேம் மதன் சேலத்தில் பதுங்கலா?- சென்னை போலீசார் விசாரணை
பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமான யு-டியூப் கேம் மதன் சேலத்தில் பதுங்கி உள்ளாரா? என்பது குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமான யு-டியூப் கேம் மதன் சேலத்தில் பதுங்கி உள்ளாரா? என்பது குறித்து சென்னை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பப்ஜி விளையாட்டு
பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யு-டியூப் கேம் மதன். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் போலீசில் பலர் புகார் அளித்துள்ளனர். அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தீவிர விசாரணை
இதையொட்டி போலீசார் அவருடைய விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் சேலம் கிச்சிப்பாளையம் வந்தனர். பின்னர் அங்குள்ள அவரது உறவினர்கள், பொதுமக்கள் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண், யு-டியூப் கேம் மதன் மீது புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் யு-டியூப் கேம் மதன் சேலத்தில் பதுங்கி இருக்கிறாரா? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.