நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

Update: 2021-06-15 22:12 GMT
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.  நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து  வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
தண்ணீர் வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 151 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 88.69 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணிக்கு அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 944 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 88.81 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், பாசனத்திற்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்