அதிகாலையிலேயே தடுப்பூசி போட குவிந்த மக்கள்

குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட நேற்று அதிகாலையிலேயே பொதுமக்கள் குவிந்தனர். குறைவான டோஸ் மட்டுமே இருந்ததால் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-06-15 20:24 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட நேற்று அதிகாலையிலேயே பொதுமக்கள் குவிந்தனர். குறைவான டோஸ் மட்டுமே இருந்ததால் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
தடுப்பூசி முகாம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் தற்போதைய தீர்வாக  கருதப்படுகிறது. முதலில் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காட்டிய மக்கள், தற்போது மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கோவாக்சின் தடுப்பூசி 29,563 பேருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி 2,02,273 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 10-க்கும் குறைவான இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. ஆண்களை விட பெண்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டினர்.
பொதுமக்கள் குவிந்தனர்
நாகர்கோவிலில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்து கல்லூரி ஆகிய 2 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அதிகாலை 6 மணி முதலே வரத்தொடங்கினர். காலை 7.30 மணிக்கு டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
நாகர்கோவில் டதி பள்ளி, இந்து கல்லூரியில் தலா 500 கோவாக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதேபோல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் 400 தடுப்பூசியும், தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் 300 தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. பேச்சிப்பாறை பழங்குடியினர் பகுதியில் நடந்த முகாமில் 470 கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்