தூத்துக்குடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தூத்துக்குடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-15 19:18 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.10 கோடிக்கும் அதிகமான மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனருமான பிரகாஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் பேசியதாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொேரானா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி பணிகளும் கிராமப்புறங்களில் முகாம் அமைத்து சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. கொேரானா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அதிக அளவில் விழிப்புணர்வு பெறும் வகையில் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் எப்.எம். ரேடியோக்களில் அதிகளவு விளம்பரப்படுத்த வேண்டும்.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் முன்னேற்பாடு பணிகளை தற்போது மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் படுக்கை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். மேலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய பணிகளையும் அதிகரிக்க வேண்டும். அதிக அளவிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். தேவையான டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை மாவட்ட அளவில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு மையங்களை கூடுதலாக அமைக்க இடங்களை தற்போதே தேர்வு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் முக்காணி, புன்னக்காயல் மற்றும் சேர்ந்தமங்கலம் பகுதியில் தடுப்பணை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீபராங்குசநல்லூர் தடுப்பணை பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டும். திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு ரூ.29.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதிகள் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஆலந்தலை தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளையும், தூத்துக்குடி பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். 

கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் பகுதிகளில் 248 ஊராட்சிகளுக்கு தாமிரபரணி குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் 93 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளின் மூலம் 175 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள இணைப்புகளை உடனடியாக முடித்து, உயர்மட்ட தொட்டிகளுக்கு நீரேற்றும் பணிகளையும் முடிக்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கோவில்பட்டி நகராட்சியில் நடைபெற்று வரும் சிறப்பு சாலைப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பிரசவ மற்றும் குழந்தை பராமரிப்பு கட்டிட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருத்தஞ்ஜெய் நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, இணை இயக்குனர் (பொது சுகாதாரம்) முருகவேல், தூத்துக்குடி மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம், காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர் சுகந்தி, பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் சேதுராமன், மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அண்ணாதுரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்