நெல்லை அருகே விபத்து; தந்தை-மகள் உடல் கருகி பலி
நெல்லை அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதி தீப்பிடித்ததில் உடல் கருகி பலியான தந்தை-மகள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளது.
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் பகுதியில் தனியார் காற்றாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக தொழிலாளர்களை நெல்லை தாழையத்து பன்னாம்பச்சேரி தெருவை சேர்ந்த டிரைவர் பால்துரை (வயது 45) வேனில் அழைத்து சென்றார். அங்கு தொழிலாளர்களை இறக்கி விட்டு மீண்டும் அவர் வேனை நெல்லை நோக்கி நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டி வந்தார். நெல்லை அருகே வல்லநாடு பக்கமுள்ள தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் கோவிலை அடுத்து வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று அவரது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் வலது புறமாக சென்று இரும்பு தடுப்பு கம்பியை ஒட்டியபடி சென்றது. அப்போது எதிரே நெல்லையில் இருந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் வேனுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது. பின்னர் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேன் டிரைவர் பால்துரை வெளியே குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து வாகனங்களில் பிடித்த தீயை அணைத்தனர்.
தீயில் கருகி பலியானவர்கள் ஒரு ஆணும், சிறுமியும் என்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் யார்? என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளது. அவர்கள், நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூைலக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் (45), அவருடைய மகள் சவுமியா (8) என்பது தெரியவந்து உள்ளது.
கணேசன் கூலி தொழிலாளி. அவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சரோஜினி கேரளாவில் வசித்து வருகிறார். இவர்கள் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். அதில் மகள்கள் தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வருகின்றனர். அவரது 2-வது மனைவி நாகர்கோவிலை சேர்ந்த உஷா. இவர்களுடைய மகள் சவுமியா. தற்போது கணேசன் 2-வது மனைவி, மகளுடன் மூைலக்கரைப்பட்டியில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு கணேசன் தனது மகள் சவுமியாவுடன் தூத்துக்குடியில் இருக்கும் தனது முதல் மனைவியின் மகள்களை பார்ப்பதற்காக மூலைக்கரைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது தான் எதிரே வந்த வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி அவர்கள் உடல் கருகி பலியான நெஞ்சை நொறுக்கும் சம்பவம் நடந்துள்ளது.
இந்த விபத்து குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் பால்துரையை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தந்தை-மகள் இறந்த சம்பவம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.