டாஸ்மாக் கடையில் அத்துமீறிய வாலிபர்கள் கைது

ஊர்காவல் படை வீரரை மதுபாட்டிலால்தாக்கி டாஸ்கடையில் அத்துமீறிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-15 17:46 GMT
பரமக்குடி, 
ஊர்காவல் படை வீரரை மதுபாட்டிலால்தாக்கி டாஸ்கடையில் அத்துமீறிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கண்டிப்பு
பரமக்குடி தர்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ் பாண்டியன், சூரியகுமார் (வயது23), சந்துரு (20) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மதுபாட்டில்கள் வாங்க சென்றுள்ளனர். அப்போது அங்கு அரசு அறிவுறுத்தல்படி ஏற்கனவே மது வாங்குவதற்காக சமூக இடைவெளி யுடன் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால் அந்த 3 பேரும் வரிசையில் நிற்காமல் மதுபாட்டில்களை வாங்கி உள்ளனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பொதுவக்குடி கிராமத்தை சேர்ந்த குழந்தைசாமி (22) என்பவர் அந்த 3 பேரையும் கண்டித்துள்ளார். உடனே ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் வாங்கி வைத்திருந்த மது பாட்டிலால் குழந்தை சாமியின் தலையில் தாக்கி உள்ளனர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. 
2 பேர் கைது
உடனே அவரை சிகிச்சைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரியகுமார், சந்துரு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான தினேஷ் பாண்டியனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்