வாலாஜாவில் இருந்து சென்னைக்கு கைக்குழந்தையுடன் நடந்து சென்ற கர்ப்பிணி. காப்பகத்தில் ஒப்படைப்பு
வாலாஜாவில் இருந்து சென்னைக்கு கைக்குழந்தையுடன் நடந்து சென்ற கர்ப்பிணி. காப்பகத்தில் ஒப்படைப்பு
வேலூர்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் சென்னைக்கு நடந்து செல்வதாக வேலூர் கால்நடை மருத்துவர் ரவிசங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற டாக்டர் அந்த பெண்ணிடம் விசாரித்தார்.
அப்போது அந்த பெண் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், காதல் திருமணம் செய்து, பின்னர் கணவரால் கைவிடப்பட்டு, உடல் நலக்குறைவால் ஒருவாரம் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், நேற்று முன்தினம் இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, எங்கு செல்வது என்று தெரியாமல் வாழ்வாதாரத்துக்காக சென்னைக்கு நடந்து செல்ல முயன்றதும், அவர் கர்ப்பமாக உள்ளதும் தெரியவந்தது.
பின்னர் அவரை காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தகவல் தெரிவித்துவிட்டு, அந்த பெண் மற்றும் அவரின் பெண் குழந்தையையும் வேலூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தார். அந்த பெண்ணின் குழந்தைக்கு வாய் பிளவு பிரச்சினை உள்ளதால் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்டர் தெரிவித்தார்.