நீலகிரியில் பலத்த மழை; சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன
நீலகிரியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஊட்டி-குன்னூர் சாலை ஆவின் அலுவலகம் பகுதியில் ராட்சத மரம் ஒன்று வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஊட்டி நகரில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பலத்த காற்று காரணமாக ஊட்டி புதுமந்து பகுதியில் போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.
அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர் மழையுடன் பலத்த காற்று வீசியது. கூடலூர் கெவிப்பாரா, வ.உ.சி. நகர் உள்பட பல இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் நேற்று முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த மின்வாரிய துறையினர் மரக்கிளைகளை வெட்டி அகற்றினர் தொடர்ந்து மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதேபோல் கூடலூர் அருகே நடுவட்டம் பகுதியிலும் தொடர் மழையால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் நடுவட்டம் பஜார் பகுதியில் உள்ள ராட்சத தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அப்பர்பவானியில் 109 மி.மீட்டர் மழையும், அவலாஞ்சியில் 83 மி.மீட்டர் மழையும் பதிவானது.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-8, நடுவட்டம்-18.5, கிளன்மார்கன் -11, அவலாஞ்சி-83, எமரால்டு-21, அப்பர்பவானி-109, பாலகொலா-12, கூடலூர்-24, தேவாலா-57, ஓவேலி-14, பந்தலூர்-51, சேரங்கோடு-15.
மழை தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- கூறும்போது, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பல்வேறு துறைகளை சார்ந்த 42 அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம், நிலச்சரிவு போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க முதன்மை தொடர்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக மழை மற்றும் அவசர காலங்களில் உடனடியாக முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.