பந்தலூர் அருகே மாணவ-மாணவிகளுக்கு அழுகிய முட்டைகள் வினியோகம் செய்யப்பட்டதா
பந்தலூர் அருகே மாணவ-மாணவிகளுக்கு அழுகிய முட்டைகள் வினியோகம் செய்யப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே உள்ள எருமாடு அரசு தொடக்கப்பள்ளியில் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளி மூடப்பட்டு உள்ளது.
இதனால் மாணவ-மாணவிகளுக்கு முட்டைகள் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சத்துணவு மையம் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாணவ-மாணவிகளுக்கு வழங்கிய முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக புகார் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன் குமாரமங்கலம், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் சீஜா மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், மாணவ-மாணவிகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், முழு விசாரணைக்கு பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.