கொரோனா மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு
தேனி மாவட்டத்தில் விளைநிலங்களுக்கு அருகில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் பாதிப்பு ஏற்படுவதாகவும், வேறு இடங்களில் கொட்டவேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிராஜ் தலைமையில் விவசாயிகள் சிலர் வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "மரிக்குண்டு சுப்புலாபுரம் விலக்கில் இருந்து அம்மச்சியாபுரம் செல்லும் சாலையில் நந்தீஸ்வரர் கோவிலுக்கு அருகிலும், விளைநிலங்களுக்கு அருகிலும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவில் இருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகிறது.
மருத்துவ கழிவுகளை கொட்டி மண்ணை போட்டு மூடி வருகின்றனர். இதனால், நீர்நிலைகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மருத்துவ கழிவுகளை நாய்கள் கவ்விக் கொண்டு நீர்நிலைகள், குடியிருப்புகளில் போட்டுச் செல்கின்றன. இதனால், மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ கழிவுகளை கொட்டக்கூடாது என்று ஏற்கனவே அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம்.
ஆனால், அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி மருத்துவ கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே விளைநிலங்களுக்கு அருகில் மருத்துவ கழிவுகளை கொட்டக்கூடாது.
பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வேறு இடங்களில் கொட்டவோ அல்லது நவீன முறையில் கழிவுகளை அழிப்பதற்கோ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.