குழந்தை திருமணம் செய்த 3 பேர் மீது வழக்கு

குழந்தை திருமணம் செய்த 3 பேர் மீது வழக்கு

Update: 2021-06-15 15:44 GMT
கோவை

கோவையில் குழந்தை திருமணம் செய்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குழந்தை திருமணம்

கோவை குறிச்சி பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக குழந்தை திருமணம் தடுப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி பாலதுரைசாமி ஆகியோர் குறிச்சி மேட்டு தோட்டத் துக்கு சென்று விசாரித்தனர். 


அப்போது ராமசாமி என்பவருடைய மகன் ஹரிஹரநாதன் (20) என்ப வருக்கும், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் பழனியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது.

 அவர்கள், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். உடனே அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பெற்றோரை அழைத்து எச்சரித்து சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஹரிகரநாதன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமி மீட்பு

இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரன் (19) என்பவ ருக்கு, வெள்ளலூர் ரோட்டில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சிறுமி ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இது குறித்த புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள், அவர்களின் வீட்டுக்கு சென்று பெற்றோரை எச்சரித்தனர். 

பின்னர் அந்த சிறுமியும், பரமேஸ் வரனும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் பரமேஸ்வரன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சட்டப்படி நடவடிக்கை

கோவை வெள்ளலூரை அடுத்த வள்ளலார் நகரை சேர்ந்த வடிவேல் மகன் விக்னேஸ்வரன் என்பவருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பழனியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. அவர்கள், கோவையில் விக்னேஸ்வரன் வீட்டில் வசித்து வந்தனர். 

இதை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விக்னேஸ்வரன் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

18 வயது பூர்த்தியாகாத சிறுமிகளை திருமணம் செய்தால் அவர்களின் மீதும், பெற்றோர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழந்தை திருமண தடுப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்