வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ஆய்வு - கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை பார்வையிட்டார்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை பார்வையிட்டார்.
வண்டலூர்,
தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகைபுரிந்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள சிங்கங்களை பார்வையிட்டார். அதற்கு பூங்கா நிர்வாகத்தினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பூங்கா இயக்குநர் தெபாஷிஸ் ஜானா பூங்காவில் நோய் பரவாமலிருக்க எடுக்கப்பட்டுள்ள பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
அதில், பூங்கா ஊழியர்களின் உடல் வெப்பம் அறிதல், பூங்கா ஊழியர்களுக்கு முழுமையான தடுப்பூசி, விலங்குகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய கவச உடை போன்றவற்றை விளக்கி கூறினார்.
மேலும் அமைச்சரிடம் சிங்கங்களின் தற்போதைய உடல்நலன் குறித்து விளக்கி கூறினார். தற்போது உள்ள 14 சிங்கங்களில், 3 சிங்கங்கள் சிகிச்சைக்கு பின் மெதுவாக குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது புதிதாக குட்டி ஈன்றுள்ள மனிதக் குரங்கு இருப்பிடம் சென்று அதன் உடல் நலம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பின்பு சிங்கம் மற்றும் புலிகள் இருப்பிடம் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்டு விளக்கங்களை பெற்றார். சிங்கங்கள் உலாவிடம் நுழைவு வாயில் வரை சென்று அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 7 சிங்கங்களின் உடல் ஆரோக்கியம் பற்றி பூங்கா மருத்துவக் குழுவுடன் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார். வைரஸ் தொற்று மேலும் பராவாமல் கட்டுப்படுத்த பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து திருப்தி தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களின் உடல் நலன் மேம்படுத்துவதற்கான
அனைத்து நடவடிக்ககளையும் எடுக்குமாறு பூங்கா அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளனர்.