குமரியில் டீக்கடைகள், சலூன்கள் திறப்பு

குமரி மாவட்டத்தில் டீக்கடைகள் மற்றும் சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-06-14 21:04 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் டீக்கடைகள் மற்றும் சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டீக்கடைகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 21-ந் தேதி காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த தளர்வுகளுடனான ஊரடங்கு நேற்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதே போல குமரி மாவட்டத்திலும் புதிய தளர்வுகளுடனான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
அதன்படி டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று காலை 6 மணிக்கெல்லாம் டீக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பாத்திரம் கொண்டு வந்து டீ, காபி மற்றும் பலகாரங்கள் வாங்கி சென்றனர். இந்த நிலையில் டீக்கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வியாபாரம் தொடங்கி இருப்பதால் டீக்கடைக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சலூன் கடைகள்
இதே போல மாவட்டம் முழுவதும் குளிர்சாதன வசதி இல்லாத சலூன் கடைகளும் நேற்று திறக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு பின்பு சலூன் கடைகள் திறக்கப்பட்டதால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான இளைஞர்களும், பெரியவர்களும் முடி திருத்துவதற்காக காத்திருந்தனர். அனைத்து சலூன் கடைகளும் அரசின் அறிவுரைப்படி செயல்பட்டன. மேலும் அழகு நிலையங்களும் திறக்கப்பட்டன.
இதுபோக எலக்ட்ரிக்கல் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகளும் செயல்பட்டன. ஹார்டுவேர் விற்பனை செய்யும் கடைகள், ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடைகள், பள்ளிக்கூட புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகள், டாஸ்மாக் மதுக்கடைகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அதன் சர்வீஸ் சென்டர்கள், வீட்டு உபயோகப் பொருட்களான மிக்சி, கிரைண்டர், டி.வி. முதலானவற்றை விற்பனை செய்யும் மற்றும் பழுது நீக்கும் கடைகள் செயல்பட்டன.
பள்ளி, கல்லூரிகள்
மேலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செல்போன்கள் மற்றும் அது தொடர்பான துணைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செல்போன் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கட்டுமானப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டன.
மேலும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் நேற்று நடந்தது. அரசு பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களும் திறக்கப்பட்டன. அங்கு காலை நடைப்பயிற்சி செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டும் மைதானங்கள் செயல்பட்டன. ஏற்றுமதி நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இ-சேவை மையங்கள், கட்டுமான நிறுவனங்கள் ஆகியவையும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கின.

மேலும் செய்திகள்