காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை குத்திக் கொலை; நண்பருக்கு தீவிர சிகிச்சை

மேலகிருஷ்ணன்புதூர், ஜூன்.15- நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மர்ம கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற நண்பரும் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-06-14 20:42 GMT
மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மர்ம கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தடுக்க முயன்ற நண்பரும் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
கொத்தனார்
நாகர்கோவில் அருகே பறக்கை, சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 24), கொத்தனார். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.
அய்யப்பனும், பறக்கை எம்.எம்.பி. தெருவை சேர்ந்த சந்தோஷ் (24) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நேற்று மாலை பறக்கை ஒன்னாம் நம்பர்குளம் வலிகொலி அம்மன் கோவில் அருகே அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அய்யப்பன் ஓட்டி செல்ல, சந்தோஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.
மர்ம கும்பல் வழிமறித்தது
சிறிது தூரம் சென்றதும் எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் அய்யப்பனை திடீரென வழிமறித்து வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த கும்பல் அய்யப்பனை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் குத்தியது. இதில் அவரது வயிறு, மார்பு போன்ற  இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
தனது கண் முன்பு நண்பன் குத்தப்படுவதை கண்டு சந்தோஷ் அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்ட நிலையில் கொலை கும்பலை தடுக்க முயன்றார். உடனே அந்த கும்பல் சந்தோசையும் விட்டு வைக்கவில்லை. அவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொலை வெறி தாக்குதலில் நண்பர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
பரிதாப சாவு 
சினிமாவில் நடப்பது போல் பட்டப்பகலில் அரங்கேறிய இந்த சம்பவத்தை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அய்யப்பன் பரிதாபமாக இறந்தார்.
அவரது நண்பர் சந்தோசுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது.
காரணம் என்ன?
கொலைக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை.
அதே சமயத்தில், மதுபோதையில் நடந்த தகராறில் இந்த கொலை நடந்ததா? முன் விரோதம் காரணமாக அய்யப்பன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காதல் விவகாரத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
படுகாயம் அடைந்த சந்தோஷ் ஆஸ்பத்திரியில் நினைவு இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சுயநினைவு திரும்பிய பின்புதான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே அய்யப்பன் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவரின் உடலை பார்த்து கதறி அழுதது காண்பவர் நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது. மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
பட்டப்பகலில் புதுமாப்பிள்ளை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்