மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
மார்த்தாண்டம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தேங்காப்பட்டணம் அருகே அரசகுலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 30), தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை ராஜேஷ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
குழித்துறை ரெயில்வே கேட் அருகே சென்ற போது, எதிரே சூசைபுரத்தை சேர்ந்த அஜின்(23)என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர்.
வாலிபர்கள் பலி
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராஜேஷ் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அஜினை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜினும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.