தென்காசியில் சலூன், டீக்கடைகள் திறப்பு

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தென்காசியில் சலூன், டீக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

Update: 2021-06-14 20:15 GMT
தென்காசி:
ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தென்காசியில் சலூன், டீக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. 

ஊரடங்கில் புதிய தளர்வுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்று குறையும் பகுதிகளில் அதன் தன்மையை பொறுத்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்தன. 

இதனைத் தொடர்ந்து கடந்த 35 நாட்களாக அடைக்கப்பட்டிருந்த டீக்கடைகள் மற்றும் சலூன் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நேற்று காலை 6 மணியில் இருந்து இந்த கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு இருந்தன. டீக்கடைகளில் பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன.  சலூன் கடைகளில் சமூக இடைவெளியில் பொதுமக்களை அமரச்செய்து அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்யப்பட்டது. 

சகஜ நிலை திரும்பியது

ஜவுளிக்கடைகள், போட்டோ ஸ்டூடியோக்கள் போன்ற சில கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை. ஆனாலும் சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், ரத வீதிகள், கன்னிமார் அம்மன் கோவில் தெரு ஆகியவற்றில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரக் கடைகளிலும் அவர்கள் அதிகமாக பொருட்களை வாங்கி சென்றனர். மாலை 5 மணி வரை தென்காசியில் சகஜ நிலை திரும்பியது.

மாலை 5 மணிக்கு மேல் போலீசார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து சென்றனர். அப்போது கடைகளை அடைத்து கொண்டிருந்த சில வியாபாரிகளிடம் உடனடியாக கடைகளை அடைக்க ஒலிபெருக்கி மூலம் வற்புறுத்தினர். இதனைத்தொடர்ந்து ஓட்டல்களை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்