குளித்தலையில் தடையை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு சீல்

தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக குளித்தலையில் தடையை மீறி திறக்கப்பட்ட 3 கடைகளுக்கு சீல் வைத்து குளித்தலை நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2021-06-14 18:22 GMT
குளித்தலை
குளித்தலை
மறைமுகமாக திறக்கப்பட்டு விற்பனை
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசின் தடையை மீறி கடைகள் திறக்கப்படுவதாகவும், அவ்வாறு மறைமுகமாக கடையைத் திறந்து விற்பனை மேற்கொண்ட இரண்டு ஜவுளி கடைகளுக்கு ஏற்கனவே தலா ரூ.5 ஆயிரம் குளித்தலை நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும் அபராதம் விதிக்கப்பட்ட ஒரு ஜவுளிக்கடை மீண்டும் திறக்கப்பட்டு மறைமுக விற்பனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் அரசு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் மீண்டும் பூட்டப்பட்டது. 
குளித்தலை பகுதியில் ஒரு சில கடை உரிமையாளர்கள் மறைமுகமாக கடைகளைத் திறந்து பொதுமக்களை அனுமதிப்பதன் மூலம் நோய்த் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், எனவே அரசு அனுமதி அளித்த கடைகளை தவிர வேறு கடைகளை திறந்து விற்பனை செய்யும் உரிமையாளர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த செய்தி தினத்தந்தி நாளிதழில் கடந்த 12-ந்தேதி செய்தி வெளியிடப்பட்டது. 
இச்செய்தியின் எதிரொலியாக குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நேற்று குளித்தலை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குளித்தலை ஆண்டார் மெயின்ரோடு தெருவில் இரண்டு முறை அபராதம் விதிக்கப்பட்டு தொடர்ந்து மறைமுகமாக திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்ற ஜவுளிக்கடை நேற்றும் திறந்திருந்தது தெரியவந்துள்ளது. 
சீல் வைத்து அபராதம் 
இதையடுத்து மறைமுகமாக திறக்கப்பட்ட வழியாக அந்த கடைக்குள் நுழைந்த நகராட்சி ஆணையரை கண்ட கடையில் இருந்த ஊழியர்கள், மேலாளர் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கடையில் துணிகள் வாங்க வந்திருந்த பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையர் முத்துக்குமார் நோய்த்தொற்று பரவல் குறித்து அறிவுரை வழங்கி அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவித்தார். பின்னர் தடையை மீறி மறைமுகமாக திறந்து விற்பனை செய்த அந்த ஜவுளி கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதேபோல அதே பகுதியிலும் மற்றும்‌ பேராளம்மன் கோவில் தெரு பகுதியிலும்‌ மறைமுக விற்பனை நடைபெற்ற இரண்டு நகை கடைகளை தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அந்த இரண்டு கடைகளுக்கும் நகராட்சி மூலம் சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்