தடுப்பணையில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற வேண்டும்

செஞ்சேரிமலை அருகே தடுப்பணையில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2021-06-14 18:15 GMT
சுல்தான்பேட்டை

செஞ்சேரிமலை அருகே தடுப்பணையில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

தடுப்பணை

சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில் தக்காளி, வெண்டைக்காய், கத்தரி, அவரைக்காய் உள்பட ஏராளமான காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ஏராளமான தென்னைகளும் உள்ளன. 

மேலும் இந்தப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர ஆங்காங்கே தடுப்பணைகளும் கட்டப்பட்டு உள்ளன. இந்த தடுப்பணைகளில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அந்தந்த ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேங்கி கிடக்கும் கழிவுகள் 

இந்த நிலையில் செஞ்சேரிமலை பிரிவில் இருந்து செஞ்சேரிமலை செல்லும் வழியில் சாலையின் ஓரத்தில் ஒரு பள்ளம் இருக்கிறது. இந்த பள்ளத்தின் இருபகுதியிலும் தடுப்பணை உள்ளது. 15 அடி ஆழம் கொண்ட இந்த தடுப்பணையில் தண்ணீர் இருக்கிறது. 

இதற்கிடையே சிலர் இந்த தடுப்பணையில் கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளை இங்கு கொட்டிச்சென்றனர். அந்த கழிவுகள் அனைத்தும் தற்போது தடுப்பணையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மிதந்தபடி உள்ளது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

அகற்ற வேண்டும் 

இந்தப்பகுதியில் உள்ள குட்டைகளில் கால்நடைகள் தாகம் தீர்த்து வருவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர ஆதாரமாகவும் உள்ளது. 

இங்கு தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டதால், குப்பைகளை யாரும் கொட்டக்கூடாது, அவ்வாறு கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் தடுப்பணையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவில்லை. இந்த குப்பைகள் பல நாட்கள் ஆனதால், அழுகி அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. 

எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து தடுப்பணையில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்