35 நாட்களுக்கு பிறகு திறப்பு: டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் குவிந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு நேற்று 144 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன. அப்போது முதல் சில கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. பல கடைகளில் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த தடுப்புகள் வழியாக வரிசையாக சென்று மதுபானங்களை வாங்கி சென்றனர். மதுபானங்கள் வாங்க வந்தவர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர்.
மது வாங்க வந்தவர்கள் இடைவெளி விட்டு வரிசையாக நிற்பதற்கு வசதியாக வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அதிக கூட்டம் இருந்த இடங்களில் டோக்கன் முறையும் கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கடைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சாயர்புரம் வட்டார பகுதியிலும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. காலையில் இருந்தே மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
கோவில்பட்டி நகரில் உள்ள 27 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. மெயின் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகம் காணப்படவில்லை. பசுவந்தனை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு காலை 8 மணிக்கே மதுப்பிரியர்கள் வரத்தொடங்கினர். கூட்டம் அதிகளவில் இருந்ததால் ேடாக்கன் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு கடை திறந்ததும் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.