முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தமிழக - கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது.
இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 130.40 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 368 கனஅடியாக காணப்பட்டது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 645 கனஅடியாக காணப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், நேற்று காலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 912 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 130.70 அடியை எட்டியுள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.