கோவை
ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி வாலிபரிடம் ரூ.45 ஆயிரத்தை ராணுவ அதிகாரி போல் பேசி வாலிபரிடம் பணம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது
மோட்டார் சைக்கிள் விற்பனை
கோவையில் வசிக்கும் வாலிபர் ஒருவர் பழைய மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பி ஆன்லைன் வியாபார இணைய தளத்தை பார்த்தார்.
அதில் அவர் விரும்பிய மோட்டார் சைக்கிள் படத்துடன் விலை குறைவாக குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அதில் இருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
அதில் பேசிய நபர், தான் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வருவ தாகவும், பணியிட மாற்றம் காரணமாக கோவையில் இருந்து அவசர மாக வெளி மாநிலத்துக்கு செல்ல உள்ளதால் ரூ.2 லட்சம் மதிப்பு உள்ள உயர் ரக மோட்டார் சைக்கிளை ரூ.45 ஆயிரத்துக்கு விற்க உள்ளதால், பணத்தை உடனே செலுத்தினால் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ரூ.45 ஆயிரம் மோசடி
அதை நம்பிய அந்த வாலிபர், அவர் கூறிய எண்ணுக்கு கூகுள் பே மூலமாக உடனடியாக ரூ.45 ஆயிரம் பணம் அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும் அந்த நபர் மோட்டார் சைக்கிளை தர வில்லை.
மேலும் ஆன்லைனில் மோட்டார் சைக்கிள் விற்பனை தொடர்பான பதிவும் நீக்கப்பட்டது.
உடனே அந்த வாலிபர், பணம் செலுத்திய நபருக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர் கொடுத்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இது குறித்து இன்ஸ்பெக்டர் நிர்மலா கூறியதாவது
ஆன்லைன் வியாபார இணையதளங்களில் ராணுவ அதிகாரி என போலி அடையாள அட்டையை வெளியிட்டு பொருட்களை குறைந்த விலைக்கு விற்பதாக போலியான புகைப்படம் வெளியிடுகின்றனர்.
உயர் ரக பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைக்கிறதே என்ற ஆசை யில் அதில் குறிப்பிடப்படும் எண்ணுக்கும் பேசும் போது பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துமாறு கூறுகின்றனர். அதை நம்பி பணத்தை செலுத்தியதும் அந்த நபர்கள் மோசடி செய்து விடுகின்றனர்.
எனவே ஆன்லைனில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பதாக கூறி பணம் அனுப்ப கூறும் மோசடி நபர்களிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வாகனம் உள்பட எந்த பொருட்களை இணையதளம் மூலம் வாங்க விரும்பினாலும் நேரில் பார்த்து உறுதி செய்த பிறகே பணத்தை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.