ஜெய்வாய் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

ஜெய்வாய் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-14 16:34 GMT
திருப்பூர்
ஜெய்வாய் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
மாணவர் சேர்க்கைக்குஅனுமதி
கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த மாதத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கிற்கு கிடைத்த பலனாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றை முழுவதுமாக குறைக்கும் வகையில் மேலும் ஒரு வாரம், வருகிற 21-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த முழு ஊரடங்கில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதலாக பல சலுகைகளையும் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கிடையே பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தீவிரம்
அதாவது பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவ-மாணவிகள் சேர்க்கை தொடர்பாக பணிகள் மற்றும் அலுவலக, நிர்வாக பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது. இந்நிலையில் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை மாணவிகள் சேர்க்கைக்கு பலர் பெற்றோருடன் வந்தனர்.
முன்னதாக பள்ளிக்கு வந்த அவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 100-க்கு மேற்பட்ட மாணவிகள் நேற்று சேர்க்கப்பட்டனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள பல பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடந்தது.

மேலும் செய்திகள்