மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி அதிர்ச்சியில் தந்தையும் சாவு

திருக்கோவிலூர் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தையும் இறந்தார். இதை மறைக்க வாலிபரின் உடலில் விஷத்தை ஊற்றிய விவசாயி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-14 16:30 GMT
திருக்கோவிலூர்

வாலிபர் பலி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேலந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 66). இவரது மகன் காசிநாதன்(31). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனது கரும்பு வயலை பார்வையிட சென்றார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த பாஸ்கர்(35) என்பவர் தனது  மரவள்ளிக்கிழங்கு வயலில் அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி காசிநாதன் பரிதாபமாக இறந்தார்.

விஷத்தை ஊற்றிய விவசாயி 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், போலீசாரிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் காசிநாதன் உடலை தூக்கி அவரது கரும்பு வயலில் போட்டார். 
மேலும் நடந்த சம்பவத்தை மறைக்க பாஸ்கர் முடிவு செய்தார். அதன்படி காசிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று மக்களை நம்ப வைப்பதற்காக அவரது வாய் மற்றும் உடலில் விஷத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். 

போலீசில் சரண்

இதற்கிடையே வயலுக்கு சென்ற காசிநாதன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பயந்துபோன பாஸ்கர் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து நடந்த சம்பவங்களை எல்லாம் போலீசாரிடம் தெரிவித்தார்.
அதன்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், செல்வம் மற்றும் பாஸ்கர், காசிநாதனின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் உறவினர்கள் காசிநாதன் இறந்து கிடந்த கரும்பு தோட்டத்துக்கு சென்றனர். 

அதிர்ச்சியில் தந்தையும் சாவு

அங்கு காசிநாதனின் உடலை பார்த்த அதிர்ச்சியில் சுப்பிரமணியன் மயங்கி விழுந்து இறந்தார். தந்தை, மகன் ஆகியோரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் காசிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்த சுப்பிரமணியின் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் பாஸ்கர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

மேலும் செய்திகள்