குடிமங்கலம் அருகே பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குடிமங்கலம் அருகே பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-14 16:21 GMT
குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே பெண்ணிடம் கத்திமுனையில் நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்கிலி பறிப்பு
குடிமங்கலம் அருகே உள்ள விருகல்பட்டியைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவரது மனைவி வேலுமணி (வயது 56). தங்கமுத்து குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். வேலுமணி தினமும் தனக்கு சொந்தமான 3 மாடுகளை காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். 
சம்பவத்தன்று வழக்கம்போல் வேலுமணி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் வந்து இங்கு யாராவது முயலுக்கு வலை வைத்திருக்கிறார்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்துள்ளார். 
பின்னர் தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொடுக்க வந்த போது தண்ணீர் பாட்டிலை தட்டி விட்டு வேலுமணியை பிடித்து இழுத்துக் கீழே தள்ளி கத்தியை எடுத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து வேலுமணி குடிமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
கைது
இதுகுறித்து குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். குடிமங்கலம் போலீசார் கொங்கல்நகரம் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது மோட்டார்சைக்கிளில் சந்தேகத்திற்கிடமான நிலையில் சென்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் பெதப்பம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பிரபாகரன் (24) என்பதும், அவர் வேலுமணியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது. பிரபாகரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து வேலுமணியின் செல்போன் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்