தண்டையார்பேட்டையில் சரக்கு ரெயில் தடம் புரண்டது
சென்னை வியாசர்பாடி, தண்டையார்பேட்டையில் சரக்கு ரெயில் தடம் புரண்டது.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி ரெயில்வே யார்டுக்கு வெளி மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து லாரி மற்றும் கன்டெய்னர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ரெயில் ஒன்று வியாசர்பாடி ரெயில்வே யார்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. தண்டையார்பேட்டை நேரு நகர் அருகே சென்றபோது திடீரென சரக்கு ரெயிலின் 4-வது பெட்டி தடம்புரண்டது. இதையறிந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர், உடனடியாக ரெயிலை நிறுத்திவிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக போராடி, தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி வைத்தனர். காலை 9 மணியளவில் சரக்குகளுடன் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர், உடனடியாக பெட்டி தடம் புரண்டதை அறிந்து ரெயிலை நிறுத்திவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது