பெங்களூரில் இருந்து புளியங்குடிக்கு காய்கறி வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
பெங்களூரில் இருந்து புளியங்குடிக்கு காய்கறி வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி:
பெங்களூரில் இருந்து புளியங்குடிக்கு காய்கறி வாகனத்தில் கடத்திய மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வீடுகளில் மதுபாட்டில் பதுக்கல்
கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து, புளியங்குடியில் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புளியங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்பாபு, காசி விசுவநாதன் மற்றும் போலீசார், புளியங்குடி பஜனைமடம் தெருவில் உள்ள பழனிமுருகன் (வயது 45), சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (37) ஆகியோரது வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து புளியங்குடிக்கு காய்கறி ஏற்றி வந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை பழனிமுருகன், மாரிமுத்து ஆகிய 2 பேரும் அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தக்காளி கூடைக்குள் மறைத்து...
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து புளியங்குடிக்கு காய்கறி ஏற்றி வந்த மினி லாரியை சிவகிரியில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தக்காளி கூடைக்குள் 22 மதுபாட்டில்களை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மினி லாரி டிரைவர்களான புளியங்குடி சிதம்பரம் தெற்கு தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சிவா (34), புளியங்குடி கற்பகவீதியைச் சேர்ந்த அசன் மகன் செய்யது அலி (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மினி லாரியுடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.