மதுபாட்டில்கள் கடத்திய 9 பேர் கைது
மதுபாட்டில்கள் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனா்.
வடலூர்,
வடலூர் 4 முனை ரோடு பகுதியில் வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த ஊ.மங்கலம் ஞானசம்பந்தம் (24), உடையார்பாளையம் இளைய பெருமாள் நல்லூரை சேர்ந்த விநாயக முருகன்(24), பார்வதிபுரம் சர்வோதயநகர் சக்திவேல் (21) ஆகியோரை கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்
இதேபோல் காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் ம.ஆதனூர் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர்கள், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து மொட்டார் சைக்கிள்களில் வந்தவர்களிடம் விசாரித்தனர். அதில் லால்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜா (வயது 36), சூர்யா (20), வடக்கு கொளக்குடி பகுதியை சேர்ந்த பிரபாகரன் (30), சுந்தர்ராஜ் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 71 மது பாட்டில்கள், அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நேற்று முன்தினம் மாலை காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த கீழ் அதங்குடியை சேர்ந்த குமார் செல்வம் (25), நீலமேகம் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 31 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.