சுருக்குமடி வலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்லமாட்டோம் மீனவர்கள் அறிவிப்பு

சுருக்குமடி வலை தொடர்பாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தடைகாலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Update: 2021-06-13 17:32 GMT
கடலூர், ஜூன்.14-


மீன்பிடி தடைகாலம் முடிந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் உள்ள  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல இருக்கின்றனர். அதேபோல் கடலூர் மாவட்ட மீனவர்களும் நாளை அதிகாலை முதல் மீன்பிடிக்க செல்ல உள்ளதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் ஒரு சில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து தேவனாம்பட்டினம் மீனவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நேற்று கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடத்தினர்.

கூட்டத்துக்கு கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, லாமேக், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், சரஸ்வதி மற்றும் போலீசார், தேவனாம்பட்டினம் மீனவ கிராம முக்கியஸ்தர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அனுமதிக்க வேண்டும்

கூட்டத்தில் பேசிய மீனவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க செல்ல தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். இதை கேட்ட அதிகாரிகள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.அதை பயன்படுத்தி மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று தெரிவித்தனர்.

 இதையடுத்து பேசிய மீனவர்கள், இது பற்றி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவை தெரிவிக்க வேண்டும். ஆனால் தடைகாலம் முடிந்தும் நாங்கள் வருகிற 20-ந்தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டோம். அதற்குள் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவுகளை தெரிவிப்பதாக கூறினர்.

 இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதன் மூலம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை முடிவு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது.

மேலும் செய்திகள்