ரூ.2¾ கோடி கையாடல்: மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்
ரூ.2 கோடியே 80 லட்சம் கையாடல் செய்த விவகாரத்தில் மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் கணேசன். இவர் மத்தூர் பகுதியில் வசூல் ஆகும் பணத்தை மின்வாரிய அலுவலகத்தில் முறையாக செலுத்தாமல் கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. மேலும் இவருக்கு உடந்தையாக கணக்கு பிரிவு ஊழியரான செல்வம் என்பவர் செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் அலுவலகத்தின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்தனர். அப்போது அதில் ரூ.2 கோடியே 80 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணி இடைநீக்கம்
இந்தநிலையில் மத்தூர் மின் வாரிய அலுவலகத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் கையாடல் செய்ததாக புகாருக்குள்ளான வருவாய் மேற்பார்வையாளர் கணேசன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த கணக்கு பிரிவு ஊழியர் செல்வம் ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து மின்வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.