டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலையில் பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலையில் பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உடுமலை
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக டாஸ்மாக் கடைகள் கடந்த மாதம் (மே) 24-ந்தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், முழு ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் வருகிற 21-ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வின்படி 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அரசுஅனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாரதீய ஜனதா கட்சி அறிவித்திருந்தது. அதன்படி உடுமலை நகரில் பொள்ளாச்சி சாலை, நேருவீதி, ஐஸ்வர்யாநகர்,காந்திநகர் உள்ளிட்ட இடங்களில் நேற்று பா. ஜனதா கட்சியினர் தங்களது வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. உடுமலை நகர தலைவர் வக்கீல் பி.என்.ராஜேந்திரன், நகர பொது செயலாளர் சீனிவாசன், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்கள் யு.கே.பி.என்.ஜோதீஸ்வரி கந்தசாமி, எஸ்.எஸ்.குட்டியப்பன், வர்த்தக அணி தலைவர் என்.டி.கார்த்திகேயன், பிரச்சார அணி தலைவர் சி.ஆர்.என்கிற சின்ராஜ், பட்டியல் அணி துணைத்தலைவர் சித்தார்த்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.