மசினகுடி அருகே வாகனம் மோதி கழுதை புலி சாவு
மசினகுடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கழுதை புலி இறந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
மசினகுடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கழுதை புலி இறந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுதை புலி சாவு
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி, சிங்காரா, சீகூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், அரிய வகை கழுதை புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மசினகுடி வனத்துறையினர் நேற்று காலை 10.30 மணிக்கு ரோந்து சென்றனர். அப்போது ஆச்சக்கரை செல்லும் வழியில் சாலையோரம் அரிய வகை கழுதை புலி இறந்து கிடந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர் மாரியப்பன், காந்தன் மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து கழுதை புலியின் உடலை பார்வையிட்டனர். தொடர்ந்து புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் வரவழைக்கப்பட்டு, கழுதை புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
வனத்துறையினர் விசாரணை
இதில், இறந்து கிடந்தது 8 வயதான ஆண் கழுதை புலி என்பதும், அடையாளம் தெரியாத வாகனம் மோதி கழுதைபுலி இறந்ததும் தெரியவந்தது. மேலும் அதன் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு உடல் புதைக்கப்பட்டது. இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
கழுதை புலி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது. இதில் சாலையோரம் கிடந்த மரத்துண்டு மீது கழுதை புலி தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் அதன் முகம் மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, அதிகளவு ரத்தபோக்கு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளது.
இதனால் கழுதை புலி இறப்புக்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டு பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.