விவசாய தொழிலாளர்கள் 579 பேருக்கு தடுப்பூசி

ஊட்டி அருகே விவசாய தொழிலாளர்கள் 579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-06-13 16:37 GMT
ஊட்டி

தொற்று  பரவலை தடுக்க ஊட்டி அருகே விவசாய தொழிலாளர்கள் 579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தொற்று பரவல்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று அறிகுறி தென்பட்டு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கிடையே அப்பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் கேரட் அறுவடை மற்றும் விவசாய பணிகளுக்கு சென்று வந்ததால் தொற்று பரவியது. இதை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை பின்பற்றாத கேரட் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

கேரட் அறுவடை பணியில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி வட மாநில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரட் கழுவும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊட்டி அருகே முத்தோரை பாலடாவில் நடைபெற்றது. 

சுகாதார குழுவினர் முகாமிட்டு 3 கேரட் சுத்திகரிப்பு நிலையங்களில் சுழற்சி முறையில் பணிக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். வடமாநில தொழிலாளர்கள் உள்பட அனைவரும் தங்களது ஆதார் அடையாள அட்டையை காண்பித்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டனர். இதில், 579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி போட நடவடிக்கை

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீலகிரியில் பழங்குடியினர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்துக்குள் தடுப்பூசி கிடைத்தால் பழங்குடியினர்கள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி ஊட்டி அருகே கவர்னர்சோலை பகுதியில் வசித்து வரும் தோடர் இன மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதில் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்